Pages

Wednesday, August 25, 2010

இப்படியாய்ச் சில குரல்கள்........

ஞாபக இடுக்கில் துயர் தரும் நினைவுகளை
மறக்க விடிகிறது
அடுத்த நாள்

தண்ணிக் குடங்களின் நீண்ட வரிசையை
கால்களால் தட்டும் சிறுவனின்
நக இடுக்கில் கிடக்கிறது
கைகளால் கிண்டிய பதுங்குகுழிகளின்
பிடிமண் உலராமலும் உதிராமலும்..

பறக்கத் திராணியற்றுப்
பல்கிப்போன இலையான்கள் மரணிக்கின்றன -
நேற்றைய மனிதர்கள் போல

நாளைக்கு காய இருக்கும்
காயத்தின் பகுதியை தடவுகிறான்
ஒருவன் - இல்லாத கையால் ....

உலவ விடுங்கள், ஓட விடுங்கள், பழக விடுங்கள் என்ற
மருத்துவரின் அறிவுறுத்தல் பெற்ற
மனம் பிறழ்ந்த குழந்தையை சுமந்து மீண்டு(ம்) வருகிறது ஊர்தி
அதே முகாமுக்கு - அடுத்த குழந்தையை சுமக்க

ஒலிபெருக்கிகள் ஓய்ந்து விட்ட பொழுதில்
புதைகுழிகள் ஆரம்பித்திருக்கும் - எனினும்
ஒப்பிட்டு புறக்கணிக்க சொல்லித்தருகிறார்கள்
இப்போதைய மரணங்களை.

சகலமும் மரணித்திருந்த பொழுதொன்றில்..
நியாயங்கேட்கும் குரல்கள்
ஒலியில்லாதவை! நிறமில்லாதவை !!
அவை குரல்களாவே இராதவை !!!.

(முகப் புத்தகக் குறிப்புகள் - ஆனி 03 2009 )

No comments:

Post a Comment