Pages

Wednesday, January 5, 2011

யாரும் வாழவில்லை!..

கொல்தன்மை அகற்றுவதற்காக கொல்லப்படுகின்ற
சந்ததிகள் குறித்த குறிப்புகளை
அறிவியலாளர்கள் சமர்ப்பிக்கிறார்கள்
கண்டடைவுகளை விதந்துரைக்கிறது
மானுடத்தின் தராசு முள்

மரபணுக்களில் எதிர்ப்பின் மூலகங்களை
அகற்றும் தொழிநுட்பம் கண்டறிந்தவருக்கு
அறிவிக்கப்படுகிறது
சமாதானத்திற்க்கான நோபல்.

நஞ்சைக் கொண்ட ஆட்டியின்
மகுடியில் வழிகின்றது நாள்
நாவை நீட்டியபடி ஆடுகிறது - நமது
ஓர்மத்தின் வால்

நஞ்சு நீக்கப்பட்ட காளான்களாய்
நலம் பேணி வளர்க்கப்பட்ட தீன் கோழிகளாய்,
மாமிசப் பிராணிகளாய் -
நாமும் இருக்கிறோம்
எதிர்ப்பின் சுவடுகள் இழந்து

குரல் என்பதொரு ஒலியாயிற்று
குருதி ஒரு திரவமாயிற்று
வேர் என்பதொரு பகுதியாயிற்று

ஒவ்வாமை, உணவுநஞ்சு
பயங்கரவாதம், பாசிசம், பிரிவினை
பல பெயர்கள் சொல்லி
பாதுகாப்பு பேணப்படுகிறது -

இருந்தும்..

யாரும் வாழவில்லை!

Friday, December 24, 2010

தன்னோடு தான் சேர்தலும் இறைவம்
என்னிலிருந்து நான் பிரிதலும் இறைவம்

Friday, September 24, 2010

காதலின் கடவுள்கள்

காதலின் கடவுளை தற்செயலாக சந்திக்க நேர்ந்தது

விசனங்களாலும் ஏமாற்றங்களாலும்
நிறைந்திருந்த கடவுள் - தான் நாடிக்கு
கொடுத்திருந்த கையை
தட்டி விட வந்தவன் என்றே
என்னை கருதினார்...

எதுவும் செய்துவிட முடியாப்
புன்னகையின் முடிவில்
பேசினார் கடவுள்

காதலின் கடவுளாய் இருப்பது
அவமானத்தாலும் ஏமாற்றத்தாலும் நிரம்புவது என்றார் -
நம்பிக்கைகளுக்கும் துரோகங்களுக்கும்
ஒருசேர சாட்சியாய் இருப்பது என்பது
நரகத்திலும் கொடிது என்றார்

காத்திருப்புகளுக்கும் கைவிடுதல்களுக்கும்
நெடுநேரம் கண்களாயிருப்பது
கடிகாரமாய் தன்னை மாற்றிக்கொண்ட
வெறும்செயல் ஒன்றெனவே கருதுவதாய் சொன்னார் கடவுள்.

ஒரு முத்தத்தில் திறக்கப்படும் கண்கள் -
அறிந்திருப்பதில்லை
தனக்கு முன்போ பின்போ
திறந்து மூடும் மறுசோடிக் கண்களை - எனினும்
இந்த இரண்டு நிலைக்கும் விதியாயிருத்தல் குறித்து
கடவுளின் வேதனை பெருகியது

சத்தியத்தின் ரேகைகள் அழிந்து போன
காதலின் கரங்களை -
காக்கின்ற கடவுள் சொன்னார்..

காதலின் கடவுள்கள் - தங்கள் காதலிகளை இழக்க சபிக்கப்பட்டிருப்பதாக்.....

Thursday, September 16, 2010

மறுத்து எழுதல் 01

விரலிடுக்கில் ஒட்டிக்கொண்டு
பின்பொரு உதறலில்
தூரச்சென்று விழுந்தாலும்
விழிச்சுழலின் மையமெனத்தாலும்
நினைவூறிப்புதைந்தாலும்
உங்கள் முன்பு
உடைந்தாலும் கிழிந்தாலும்
வேண்டுமிங்கே ஒரு விம்பம்
எனக்கு

வரிசையாய் எழுகின்ற
உங்கள் முகங்களுக்குத்
தப்பி எதையும் எழுதிவிட
என்னால் முடியாது
ஒரு தலையாட்டியின்
மொழிக்குத் தவறிய உணர்வோடு
என்
சுதந்த்திரத்தை
கைது செய்கிறீர்கள்

என் சொற்கள்
இலை தின்ற புழுக்களாய்
கொழுத்துக் கிடந்தன
பின்
வனப்பேறிய சிறகுகள்
உதிர்ந்து கிடக்க
பெயர்ந்தன

எல்லாம் தாண்டி எழுகின்ற பாடலும்
என்னக்குள்ளே புதைக்கிறது
எல்லாத்துளைகளும் சிலந்திக்கொட்டுகளாக
வலை பாவி கிடக்கிறது
நினைவு இழந்த கவிதை ஒன்று
சிலந்தி வாயில் சுரக்கிறது

ஒரு சிறகுதிர்த்த
ஈசலின் உடல் வரியில்
எழுதப்பட்டிருக்கிறது எனது பாடல்
திசை மறந்த ஈசலை
நசுக்கும் போதொன்றில்
கொல்லப்படும் அவை குறிப்பிழந்து..

எல்லாவற்றின் பின்னும் பின்னும்
வரும்
சிறகுதிர்த்த ஈசலின் பயணம்

Friday, September 10, 2010

துப்பாக்கிகள் மௌனிப்பதில்லை......!

இன்னும் தேடப்பட,
கைதுசெய்யப்பட
கழுத்து நெரிக்கப்பட
அரவமற்ற இரவொன்றில் அம்மணமாக்கி கொல்லப்பட
பிடரிகளும் நெற்றிகளும் தயாராய்
மனிதர்கள் இருக்கிறார்கள்

எல்லோரும் கைவிட்டிருக்கிறார்கள்
இன்னும் - கைவிடாதிருப்பது
இப்போதும் எப்போதும்
துப்பாக்கிகளே..!

ஒரு விசாரணைக்கான அழைப்பு
திகிலில் தொடங்குகிறது
பின்
நிரந்தர துயிலில் முடிகிறது
இடையில் அகப்பட்டு
எது கிழிந்தாலும் - துவக்குகள் அஞ்சுவதில்லை

துப்பாக்கிகள் சடமன்று,
அது
திட்டமிடும்
கைது செய்யும்
காவல் வைக்கும்
விசாரித்து தீர்ப்பெழுதும்
தீர்த்துக்கட்டி தெருவில் வீசும்
திரும்பத் திரும்ப
அதிகாரத்தின் பேரோசையை
திசையெங்கும் கூவிச் சிரிக்கும்

பின்பு
விசாரணைக்கு வெளிக்கிட்டுப்போகும் -
விழிகளில் கருணை ததும்ப
சாட்சியம் அளிக்கும் -
கண்ணியம் ஒழுக மானுடம் பேசும்

அதிகாரத்தினால் விடுதலையாகி மீண்டும் அதிகாரம் பெறும்..

எவர் வெடித்தாலும் ஒரே மாதிரியே
வெடிக்கும் - துப்பாக்கிகள்
எப்போதும்
மௌனிப்பதே இல்லை..

Tuesday, August 31, 2010

திருமண வரவேற்பு தின வாழ்த்துக் கவிதை - சுதன் மதனிகா (23 .01 .2010)

பசை பூசிய ஞாபகச் சுவரெங்கும் நம் நட்பு மின்மினிகள்
அசை போடும் தருணங்களில்
அலையாகிறது நாம் இருந்த நிமிடங்கள்
துணை கொள்ள பிரியமான தோழன் சுதன் - மதனியோடு இணைகொண்டு சுகம் சேரும் நாளிது!

கவி கொண்டு வாழ்த்தினோம்!
நூறும் புகுக நலம் நாளும் மிகுக,
நற்றமிழெனவே அணி கொண்டு வாழ்க!

மாலையில் இணைந்தது இரண்டு மனங்கள்
நாணங்கள் இனித் தொடர்கின்ற தினங்கள்
நல்ல பேச்சு நலமான சிரிப்பு - வல்லமை உந்தன் எழுத்து
வில் வளைத்து வென்றனன் நங்கை - வாழ்த்துகள்

மதிமுகத்து மங்கையாம் மதனிகா
மதி நிறைந்த மணவாளன் சுதன்
மனதிணைந்த மணவிழாக்காட்சி
உங்கள் மகிழ்வுக்கிலக்கணம் மாங்கல்யசாட்சி

இவனோடு இவளாகி ...
சிவனோடு உமையாகி
சிறப்பான துணையாகி -
சீர் மிகுந்து நீர் வாழ்க

கவினூறும் பதினாறும் கொள்க!
கலைகொள்ளும் திறன்யாவும் வெல்க
உடலோடு உயிர்
கொண்டுறைக உங்கள்உளம்நாளும் இனிதாலே மல்க

அனுதினமும் நீங்கள் அன்றிலின் சிறகுகள்
உங்கள் அன்புக்கில்லை அடைக்கும் கதவுகள்
தாள் திறக்கும் காதலின் சாகரம் வாழ்வில்
இன்பத் தளிர் துளிர்க்கும் கைகளில் சீக்கிரம்

வாழ்த்துகள் வந்து நிதம் உம்மைப் பாடும்
வருங்காலம் வாழ்க்கைக்கோர் உவமை கொள்ள உம்மை தேடும் -

வாழ்க வாழ்க வாழ்கவென நெடிது வாழ்த்தி - விடைபெறும் நண்பர்கள் நாம்

.......................

அலை வந்து

மணல் கொண்டு போகும் - ஆனாலும்

கரை என்றும் கடலோடு வாழும்...

துயர் அடிக்க பிரிவதில்லை

பிரியத்தின் மலை

நம் விரல் இடுக்கில் நிரம்பியது

அன்பெனும் அலை