Pages

Friday, August 20, 2010

சிறை கிடக்கும் சொற்கள்...

நன்று நன்று என்று
நாம் மகிழ்ந்த கவிதையின்
பொருளை தந்தது சிறைகிடந்த ஒரு சொல்


ஒரு சொல்லை சிறைவைத்துத்தான்
எமக்கான கவிதையை நீங்கள் எழுதுவீர்களானால் ....
அந்த கவிதை தேவையே இல்லை சகோதரனே!

மௌனம் எமக்கான வழக்கை பேசி முடிக்கட்டும்.
விதிக்கப்பட்டது குறித்து, விதி வருந்தட்டும்!

கவிதையின் அடைப்புள் ஒரு சொல் கிடக்குமெனில்
அதைவிட வேறென்ன விடுதலையை
கவிதை பேசிவிடப்போகிறது?

பெருந்துயரமாக இருக்கிறது அந்தச்
சொல்லின் சிறை குறித்து ...

எனக்கென்னவோ அந்தச் சொல்லின் சிறையில்
தமக்கான விடுதலையை எண்ணி
மற்றச் சொற்கள் மகிழ்வதாய் தோன்றுகிறது.

சகோதரனே!
உண்மையில் சிறை வைக்கப்பட்டிருக்கும்
அந்தச் சிறு சொல்லுக்கு - எதுவும் தெரியாது
கவிதை குறித்தும் கவிதைக்கு அதன் உபயோகம் குறித்தும்.

எழுதுகின்ற பெருந்தலைவ!
உனக்கு எப்படி எடுத்துச் சொல்வேன்?..
குழலை யாழை மேவும் பெருஞ்சொல்
மழலை என்று!.

(..மானுட, தேசிய, சமூக, பொருளாதார மீட்சிக்காய் உலகம் முழுதும் சிறை வைக்கப்படும் சிறு சொல்பேசிகளுக்கு..)

No comments:

Post a Comment