Pages

Friday, September 24, 2010

காதலின் கடவுள்கள்

காதலின் கடவுளை தற்செயலாக சந்திக்க நேர்ந்தது

விசனங்களாலும் ஏமாற்றங்களாலும்
நிறைந்திருந்த கடவுள் - தான் நாடிக்கு
கொடுத்திருந்த கையை
தட்டி விட வந்தவன் என்றே
என்னை கருதினார்...

எதுவும் செய்துவிட முடியாப்
புன்னகையின் முடிவில்
பேசினார் கடவுள்

காதலின் கடவுளாய் இருப்பது
அவமானத்தாலும் ஏமாற்றத்தாலும் நிரம்புவது என்றார் -
நம்பிக்கைகளுக்கும் துரோகங்களுக்கும்
ஒருசேர சாட்சியாய் இருப்பது என்பது
நரகத்திலும் கொடிது என்றார்

காத்திருப்புகளுக்கும் கைவிடுதல்களுக்கும்
நெடுநேரம் கண்களாயிருப்பது
கடிகாரமாய் தன்னை மாற்றிக்கொண்ட
வெறும்செயல் ஒன்றெனவே கருதுவதாய் சொன்னார் கடவுள்.

ஒரு முத்தத்தில் திறக்கப்படும் கண்கள் -
அறிந்திருப்பதில்லை
தனக்கு முன்போ பின்போ
திறந்து மூடும் மறுசோடிக் கண்களை - எனினும்
இந்த இரண்டு நிலைக்கும் விதியாயிருத்தல் குறித்து
கடவுளின் வேதனை பெருகியது

சத்தியத்தின் ரேகைகள் அழிந்து போன
காதலின் கரங்களை -
காக்கின்ற கடவுள் சொன்னார்..

காதலின் கடவுள்கள் - தங்கள் காதலிகளை இழக்க சபிக்கப்பட்டிருப்பதாக்.....

No comments:

Post a Comment