Pages

Thursday, August 19, 2010

மீட்சியற்ற பாடலில் மொய்க்கும் எறும்புகள்


நிலவறைத் தரிப்பிடத்தில் மாட்டிக்கொண்ட
சிறு பறவை - தன் வானம் தேடி
ஓயாச் சிறகடிப்பில் தவித்தது

யாரும் உதவ முடியா பெருங்குழியை
சிறகு கொண்டு தூர்க்க
கருணை ததும்பும் குரலெடுத்து
கூர் நாக்கு வலித்தது

கீழிறங்கும் பூமியில்
மேல் நோக்கி பறக்கும் பறவையை
விந்தை என்றபடி மாந்தர் கடந்தனர்.

தன்னை நோக்கி ஊர ஆரம்பிக்கும் எறும்புகளை
பார்க்கத் திறந்த விழியோடு
நரகக் குழியின் மனிதர்களை சபித்து
மரித்து கிடந்ததது பறவை.

எவரையும் சபிக்க முடியாக் குழிகளில்
கழிகிறது பொழுது
அறிந்தே தவறிய பயணத்தில்
விரிந்தே வலிக்கும் சிறகுகள்

வேகத்தெருவும் விண்முட்டும் வீடும்
போகப் பொழுதும் - நமக்கான குழிகள்
திசை தேடி கசிகிறது பாடல்
நமக்கான எறும்புகள் ஊரத்தொடங்குகிறது...

Sunday, August 15, 2010

பூர்வீகம் மறுக்கப்பட்ட நிலங்களில் புதைந்திருக்கும் கனவுகள்.

மொறேவேவா - பன்குளக் காடுகளில்
முப்பதாண்டுகளின் முன் - அப்பாக்கள்
முள் கிழிக்காத கனவுகளின் சொந்தக்காரர்கள்.

கரடி துரத்தி இங்குதான்
காடு பிரித்தார்கள் - கனவு நுரைக்க
கைபிடித்த மனைவிமாருடன்.

வேர் கிளப்பி ஏர் புதைத்த போதும்
வியர்வைத்துளி கிணற்றில் நீர் நிறைத்த போதும்
தங்கள் கனவுகளுக்கு வண்ணம் பூசிக் கொண்டார்கள்

இப்படித்தான் இருந்தன ..
அம்மாக்களுக்கு பிள்ளைகளாய் நாமும்
அப்பாக்களுக்கு கனவுகளாய் அவையும்.....

அதிகாரத்தின் கரங்கள் - குருதி வழிய
சூரியனை கைது செய்திருந்த பகலொன்றில்
அவர்கள் விரல் புதைந்த சேற்றில் இருந்து
நிலம் பிரிந்தார்கள்.

பிற்பாடு
நிலமிழந்த மனிதர்கள்
கனவு கிழிந்த கண்களோடு, கடவுச்சீட்டுக்காய் புன்னகைத்தார்கள்.
நித்தியம் நோக்கிய பயணங்களில்
மத்திய கிழக்குக்கு பெயர்ந்தார்கள்.

பண்ணையாளன் தன்மானம்
முசல்மான்களிடம் அடகு வைக்கப்படுகையில்
அவர்கள் முடியிழக்க ஆரம்பித்தார்கள்.
முறைக்கு முறை கடவுசீட்டுகளை புதுப்பித்துக்கொண்டார்கள்
மீண்டும் காடாகியது அவர்கள் கிணற்றடி.

இப்படித்தான் உதிர்ந்தது அவர்கள் கனவு

மரணம் - தன் படுக்கையோரத்தில் அனுமதிக்கும்
உரையாடல்கள் வார்த்தைகளால் மட்டும் ஆவதில்லை
புலன்களை வாசிக்கும் அப்பொழுதுகளுக்கு இறப்பில்லை
நினைவின் சுழலில் - கனவின் துகளை மறைக்க
முயன்று தோற்ற மனிதன்,
"பண்ணையாளனாய் இருந்திருக்க வேண்டியது.." என்ற
பேச்சோடு மூச்சை விட்டான்.

கனவுகள் அழிக்கப்பட்ட நிலங்கள்
இப்போது திரும்பி வருகின்றன...,
அப்பாக்களின் பெயரைச் சரியாய் சொன்னபடி
நிலம் குறித்தான அம்மாக்களின்
தொலைபேச்சில் மீள்குடியேறுகிறது - அப்பாக்களின் புன்னகை

நாங்கள் பெறுமதி குறித்தான சிந்தனைகளுடனும்,
farm ville இல் fan களாக இருக்கும் அவர்கள் பேரகுழந்தைகளுடனும்,
மீட்சியற்ற தருணங்களில்
பிரக்ஞையற்று இருக்கிறோம்
அவ்வபோது இதுபோல எதிர்காலமிழந்த கவிதைகளை எழுதிக்கொண்டு..

( "farm ville" - facebook myspace முதலிய சமூக தளங்களில் பெருவாரியாக விளையாடப்படும் ஒரு கற்பனாவாத விவசாயம் தொடர்பான பொழுதுபோக்கு விளையாட்டு)

Friday, August 13, 2010

தரை வழிந்திருக்கும் சூரியன்!

நிர்வாணம் அணிந்திருந்த மனிதர்களை
நோக்கி
வரிசையாய் விளித்தது -
அதிகாரத்தின் முனைவிழிகள்
விசை எனும் பெருங்கருணை ததும்பும் உயிர் கொண்டு...

தரை பிளந்திருந்த தரவைஎங்கும்
சமாதானப் பூக்கள் விரிந்தன
இனிகருவுரும் மகரந்தங்களை தூவியபடி.... \
அருகாமைச் சிரிப்பொலி என

குருதி சூரியனாகி மணம் வீசிய
மாலையில்
நிலத்தில் வழிந்திருந்தது சூரியன்!
தன்னை மிதித்தலையும் விழிகளின் சாட்சியாய்!!

பிடரி துளையிட பிளந்து கிடந்த
பிணங்கள் உயிர்த்துக் கிடந்த தரையில்
இருந்து தடயங்கள் முளைத்தன
தலை பருத்த காளான்களாய்..

இத்தனைக்கும் முன்பே
இனிது கொல்லப்பட்டிருந்தது இவ்வுலகு
கண்கள் திறந்திருக்க...

(நிர்வாண மனிதர்களை வரிசையாக துப்பாக்கிகளால் சுடுவது தொடர்பில் காணொளி வெளியாகி ஏறத்தாள ஒரு வருடமாகும் நிலையில் கடந்த 10 /10 /2009 எனது முகப்புத்தகத்தில் எழுதப்பட்ட கவிதை இது)

Friday, July 30, 2010

சுவடுகளை பின் தொடர்தல்... 01

நினைவுச் சுவர்
மீது ஈசல் கால்களால்
ஊர்ந்து ஊர்ந்து
ஏறும் உன் இறகுதிர்த்த சுவடுகள்

நேற்றைய மணலில்
கால்புதைய நடக்கையில்
ஒட்டகத்தாடையில் அசைபோடப்படுகிறது....
நாம் முள் கிழித்த கள்ளிப் பூவொன்றின் கானம்

சுவடுகளின் சிறகில்
நினைவுகளின் பயணம்..
நானோர் பாதை தெரிந்த பயணியாகிறேன் -
சுவாரசியங்களற்று விரிகிறது வானம்

புன்னகைக்க தெரிந்த உதடுகளில்
வசீகரம் மிதத்தியது உன் வாசனை - பின்
கசப்பு சுரந்த கண்களில் நிறைந்தது
ஒரு கடல் கரிப்பு.

என் அறைதோறும் ஒளிர்ந்தன
உன் வார்த்தை மின்மினிகள்
இறப்பில் ஒளிர்தல் இழக்குமென அறியாச் சிறுபறவை
அதை அலகு கொத்தி பதித்தது மனசென்ற சுவர்

பேசித்தீரா நேசங்களை
பேசப் பேசத் தீர்ந்தது பொழுது
நம்மிடம் மொழி கற்றிருந்த
விண்மீன் கண்ணில் - விடிந்தது பகல்

பின்

பிரிந்து போன
பாதங்களில் இருந்தன..
பிரிக்க முடியாத சுவடுகள்
நீ என்றும் நான் என்றும்

Tuesday, June 29, 2010

இயல்புக்குத் திரும்புகின்ற நகரம் பற்றிய குறிப்புகள்

இயல்புக்குத் திரும்புகின்ற நகரம்
மனிதர்களை யாசிக்கிறது
தேவையுடன் இருக்கும் ஒரு
முதிய விபசாரியை போல...

தெருக்களில் சிதறிக்கிடக்கின்ற
மாநகரின் சிரிப்பு
அள்ளுவாருக்கு காத்திருக்கிறது
ஒரு குவியல் அலங்கோலமாக....

எதையோ அல்லது
ஏதையுமே மறைக்க முடியா
முகங்களைச் சுமக்கின்ற மனிதர்கள்
வெளிப்படத் தொடங்குகிறார்கள்

இயல்புக்குத் திரும்புகின்ற நகரத்தில்
இன்று குறித்தான எதிர்பார்ப்புகள்
கதவுகளின் தாள்ப்பாளினில்
தொங்கிகொண்டிருக்கின்றன – ஒரு சிலந்தி போல

குறுக்குச் செய்திகள் மறைந்திருக்கின்ற
தொலைக்காட்சியில் இருந்து
வெளிப்படுகிறது
அசுவாரசியத்தின் முகம்

இயல்புக்குத் திரும்புகின்ற நகரத்தின் மீது
ஒலிக்கிறது – ஒரு ஆலயத்தின் மணி
கேள்வியாக அல்லது
பதிலாக

மூடிக்கிடக்கும் தேநீர்க்கடைகளை
குறிகளின் பேரால் சபித்துக் கொண்டு கடப்பவர்கள்
அறியத்தருகிறார்கள்
ஒரு புணர்ச்சியை விட உயர்ந்தது ஒரு கோப்பைத் தேநீரென...

ஒரு நகரின் இயல்பை மறுத்தவர்களும்
அதைத் தடுத்தவர்களும் – தமக்கான நியாயங்களுடன்
ஓய்வெடுத்துக் கொள்ளும் பொழுதொன்றில்
இயல்புக்குத் திரும்பத் தொடங்குகிறது நகர்.

( ஹர்த்தால்கள் சூழ்ந்திருந்த 2006 ஆம் ஆண்டின் வவுனியாவின் நினைவுகளுக்கும் – ரோரண்ரோவின் சென்ற வார இறுதிக்கும்..)

Saturday, June 19, 2010

தேநீர்க் குறிப்புகளும் சில தவிப்புகளும்...

நம்மைச் சுமந்து பயணிக்கிறது பாதை
பகலும் இரவும் கலந்த நிறமொன்று நம்மிடம் ஒட்டியிருக்கிறது
நமக்கிடையில் - நம்மோடு அமர்கிறது
எல்லாமறிந்த மௌனம்

வேகத் தெருவில் கசிந்துகொண்டிருக்கிறது
மாமிசப் பசுக்களின் கண்கள்.
சிறகு முளைத்த கணங்கள்
இருவரிடமும் இருந்து பறந்து பறந்து
பெருஞ்சுவரில் முகம் அறைந்த பறவைகளாய் விழுகிறது
மீண்டும் மீண்டும்

சொற்களின் உரசலில் பட்டாம்பூச்சிகள் நிறமிழக்கின்றன
நக இடுக்கில் உருள்கிறது
நம்மை நாமே தேடிக் காயம் செய்த வார்த்தைகள்
சிறகு உதிர்த்த ஈசலினை போல
நம்மிடையே கணக்கற்று ஊர்கிறது
நம்மை வெளிப்படுத்தும் தருணங்கள்.

அறியப்பட வேண்டிய அவசரங்கள் ஏதுமின்றி
காத்திருக்கிறது - நம் வாழ்வும்
அடுத்த சிறுநகர் சந்திப்பில் நமக்கான தேநீரும்.

Sunday, July 5, 2009

அப்பா, நான் மற்றும் நாக்கிழந்த பொம்மை நாய்க்குட்டி..

அப்பா...!
நமக்கான புரிதல்களின் முரணை பேச இருக்கிறது
அம்மாவும் அறியாமல்...

எனது நான்காம் வயதில்
எனக்கு தந்த குரைக்கும் நாக்குட்டிப் பொம்மையை
எனக்கு பிடிக்காது போன தருணத்தில்
அதன் சிவத்த நாக்கை பிடுங்கி மழையில் எறிந்தேன்
நாக்கு மழையில் நீந்தித் தொலைந்த போதும்
நாய்க்குட்டி குரைத்துக் கொண்டேயிருந்தது!

பிற்பாடு ...
ஏனென்று தெரியாத பிரியங்களின் வரட்சி
சொற்களின் நாக்கை பிடுங்கி எறிந்தபோதும்
நமக்கான இடைவெளிகளை
நமது சகோதரிமார் நிரப்பிக்கொண்டபோதும்
நான் பேச இருந்தது உண்டு உன்னோடு
பேசாமல் மறந்ததுண்டு என்னோடு

நாங்கள் பேசிய இரவுதனில்
என்னோடும் உன்னோடும் எச்சில் வைத்த மிச்சத் தேநீரை பருகியபடி அழையா விருந்தாளியாய் அமர்ந்திருந்தது மரணம்!

வைத்தியசாலைகளின் இரவுகள் உணர்தலால் ஆனவை
அந்த இரவுகளுக்கு புலன்கள் இருந்தன
என் தகப்பனாய் நீ என்னைப் பேசினாய்
நமக்கான தருணங்களில் மௌனமாய் இருந்தது மரணம்
எமக்கான வரட்சியில் கண்ணீரை சிந்தினோம்.

உறவின் தொடர்ச்சி ஒரு நாய்க்குட்டியை போல
குரைத்துக்கொண்டே இருக்கிறது
நாக்குகள் குறித்த கவலைகள் அற்று..