Pages

Friday, September 10, 2010

துப்பாக்கிகள் மௌனிப்பதில்லை......!

இன்னும் தேடப்பட,
கைதுசெய்யப்பட
கழுத்து நெரிக்கப்பட
அரவமற்ற இரவொன்றில் அம்மணமாக்கி கொல்லப்பட
பிடரிகளும் நெற்றிகளும் தயாராய்
மனிதர்கள் இருக்கிறார்கள்

எல்லோரும் கைவிட்டிருக்கிறார்கள்
இன்னும் - கைவிடாதிருப்பது
இப்போதும் எப்போதும்
துப்பாக்கிகளே..!

ஒரு விசாரணைக்கான அழைப்பு
திகிலில் தொடங்குகிறது
பின்
நிரந்தர துயிலில் முடிகிறது
இடையில் அகப்பட்டு
எது கிழிந்தாலும் - துவக்குகள் அஞ்சுவதில்லை

துப்பாக்கிகள் சடமன்று,
அது
திட்டமிடும்
கைது செய்யும்
காவல் வைக்கும்
விசாரித்து தீர்ப்பெழுதும்
தீர்த்துக்கட்டி தெருவில் வீசும்
திரும்பத் திரும்ப
அதிகாரத்தின் பேரோசையை
திசையெங்கும் கூவிச் சிரிக்கும்

பின்பு
விசாரணைக்கு வெளிக்கிட்டுப்போகும் -
விழிகளில் கருணை ததும்ப
சாட்சியம் அளிக்கும் -
கண்ணியம் ஒழுக மானுடம் பேசும்

அதிகாரத்தினால் விடுதலையாகி மீண்டும் அதிகாரம் பெறும்..

எவர் வெடித்தாலும் ஒரே மாதிரியே
வெடிக்கும் - துப்பாக்கிகள்
எப்போதும்
மௌனிப்பதே இல்லை..

No comments:

Post a Comment